
நாட்டிங்காம்:இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
சொந்த மண்ணில் போட்டி நடப்பது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பீட்டர்சன், டிராட், பெல், பிரையர், பிராடு ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் டிரெம்லெட்டுக்கு பதிலாக பிரெஸ்னன் களமிறங்க வாய்ப்புள்ளது. அவருடன் ஆண்டர்சன், ஸ்டூவர் பிராடு வேகக் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இந்திய அணி பேட்டிங்கில் முகுந்த், டிராவிட், லஷ்மண், ரெய்னா கணிசமாக ரன் குவித்தாலும் மற்ற வீரர்கள் தடுமாற்றத்துடனேயே விளையாடினர்.
தொடக்க வீரர் கம்பீர் காயம் அடைந்துள்ளதால் அவர் களமிறங்குவதும் கேள்விக் குறியாகவே உள்ளது. அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், முகுந்த் & டிராவிட் ஜோடி இன்னிங்சை தொடங்கும். கம்பீருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அணியில் இடம் பெறலாம். ஜாகீருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் அல்லது முனாப்புக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். லார்ட்ஸ் டெஸ்டில் ஹர்பஜன் சுழல் எடுபடாததால் அவருக்கு பதிலாக அமித் மிஷ்ராவை சேர்ப்பது பற்றியும் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக யோசித்து வருகிறது. களமிறங்கும் 11 வீரர்கள் பற்றி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் முடிவு செய்யப்படும் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தொடர்களில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்றாலும், பின்னர் சுதாரித்து விளையாடி தொடரை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது போலவே இங்கிலாந்து தொடரிலும் இந்தியா சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனுபவ வீரர்கள் சச்சின், டிராவிட், லஷ்மண் கை கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நம்பர் 1 அந்தஸ்து பறிபோகும் அபாயம் உள்ளதால், இந்திய வீரர்கள் முனைப்புடன் விளையாடி பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளனர். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
0 comments:
கருத்துரையிடுக